https://img.dailythanthi.com/Articles/2020/May/202005270331328972_Road-works-will-continue-despite-Chinese-resistance-at-the_SECVPF.gif

எல்லையில் சீனாவின் எதிர்ப்பை மீறி சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு

இந்திய-சீன எல்லையில், சீனாவின் எதிர்ப்பை மீறி சாலை பணிகளை தொடர இந்தியா முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி, அருணாசலபிரதேசத்தை முழுவதுமாக சொந்தம் கொண்டாடும் சீனா, லடாக்கின் சில பகுதிகளையும் சொந்தம் கொண்டாடி வருகிறது. அதனால்தான், லடாக்கை யூனியன் பிரதேசமாக இந்தியா அறிவித்தபோது, அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

கிழக்கு லடாக்கின் பங்காங் சோ ஏரி அருகே பிங்கர் பகுதியில் இந்தியா முக்கியமான சாலை அமைத்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் இணைப்பு சாலை ஒன்றையும் அமைத்து வருகிறது.இந்த சாலைகள் அமைப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக, கடந்த 5-ந் தேதி, கிழக்கு லடாக்கில் பங்காங் சோ ஏரி அருகே இந்திய-சீன படைகள் இடையே மோதல் நடந்தது.இரும்பு கம்பிகள், தடிகள் ஆகியவற்றை கொண்டு மோதினர். கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதில், இருதரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பின்னர், 9-ந் தேதி சிக்கிம் மாநிலத்திலும் மோதல் நடந்தது. இதையடுத்து, இரு நாடுகளும் தங்கள் படை பலத்தை அதிகரித்துள்ளன. அங்கு ரோந்து சுற்றி வருகின்றன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.இந்தியா-சீனா இடையே 3 ஆயிரத்து 488 கி.மீ. தூரத்துக்கு எல்லை கோடு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகத்தான் எல்லை பகுதிகளில் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்தியா தீவிரமாக உள்ளது.இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவதால், சாலை திட்டங்கள் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இருப்பினும், சீனாவின் எதிர்ப்பை மீறி சாலை உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளை தொடர இந்தியா முடிவு செய்துள்ளது. லடாக், சிக்கிம், உத்தரகாண்ட், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் எல்லை கோடு அருகே நடந்து வரும் எந்த கட்டமைப்பு பணிகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டாம் என்று ராணுவ தலைமைக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.கிழக்கு லடாக் சூழ்நிலை குறித்து ராஜ்நாத்சிங்கிடம் ராணுவ தளபதி நரவனே தினந்தோறும் எடுத்துக் கூறி வருகிறார். அதில், சீனாவின் அத்துமீறலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.முப்படைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து முப்படை தளபதிகளுடன் நேற்று ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார்.இதற்கிடையே, இந்திய ராணுவ படைப்பிரிவு தலைவர்களின் 3 நாள் மாநாடு இன்று தொடங்குகிறது. கடந்த மாதம் நடத்த திட்டமிட்டிருந்த இம்மாநாடு, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.இந்த மாநாட்டில், கிழக்கு லடாக் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ராணுவ அதிகாரி கூறுகையில், “சீனாவின் அத்துமீறல் அணுகுமுறைக்கு எதிராக, மாநாட்டில் நமது படைத்தலைவர்கள் வியூகம் வகுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.