இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முதன் முதலில் மார்ச் மாதம் 22-ந்தேதி ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த மக்கள் ஊரடங்கு சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதே மாதத்தில் 25-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வரையிலான 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதிலும் கொரோனா கட்டுக்குள் வராததால் மேற்கொண்டு 19 நாட்கள், அதாவது மே 3-ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து மே 17-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்ட 3-ம் கட்ட ஊரடங்காலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அடுத்து பிறப்பிக்கப்பட்ட 31-ந்தேதி வரையிலான 4 கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. ஆனாலும் கொரோனா ஆட்டம் நின்றபாடில்லை.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,767 ஆகவும், பலி எண்ணிக்கை 4,337 ஆகவும் உயர்ந்துள்ளது. குண்டமடைந்தோர் எண்ணிக்கை 64,426 ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து 6-வது நாளாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.