இரட்டை குழந்தைகளுக்கு குவாரண்டைன், சானிடைசர் என பெயர் வைத்த பெற்றோர்!
by jeba_ns7மீரட்டை சேர்ந்த தம்பதி தங்களுடைய இரட்டை ஆண் குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிடைசர்’ என பெயர் வைத்துள்ளனர்.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனாவால் இதுவரை 57,15,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,52,904 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் சமூக விலகல் ஒன்றுதான் தற்போதைக்கு தீர்வாக கூறப்பட்டுள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் சமூக விலகலை பின்பற்ற வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் தொடர்ந்து வழங்கட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் லாக்டவுன், குவாரண்டைன், சானிடைசர், கோவிட் உள்ளிட்ட வார்த்தைகள் பிரபலமடைந்து வருகின்றன.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த தம்பதி, புதிதாக பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிடைசர்’ என பெயர் வைத்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இந்த இரண்டு வார்த்தைகளும் மிக முக்கிய பங்கு வகிப்பதால் தனது குழந்தைகளுக்கும் அந்த பெயரையே வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு குவாரண்டைன் மற்றும் சானிடைசர் உதவுவதாகவும், அதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பெயரை வைத்துள்ளதாக குழந்தைகளின் தாய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இரட்டை குழந்தைகளின் தந்தை கூறுகையில், ‘குவாரண்டைன் மற்றும் சானிடைசர் நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதனால் அந்த பாதுகாப்பு உணர்வு வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என நினைத்து குழந்தைகளுக்கு பெயர் வைத்தோம். இதனை விட சிறந்த பெயரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை’ என கூறியுள்ளார்.