https://d13m78zjix4z2t.cloudfront.net/horse_0.png

கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட குதிரை!

by

காஷ்மீரின் கொரோனா சிவப்பு மண்டலப் பகுதியான சோபியானில் இருந்து ரஜவுரிக்கு வந்த குதிரையை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க உத்தரவிடப்படுள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக ஸ்ரீநகர், பண்டிபூரா, அனன்நாக் மற்றும் சோபியான் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து வெளியேறும் நபர்கள் தனிமைப்படுத்துதல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவப்பு மண்டலமாக உள்ள சோபியானில் இருந்து ஒரு நபர் தனது குதிரையுடன் ரஜவுரிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து அவரது குதிரையை என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர். 

இதனை அடுத்து கால்நடை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை கேட்ட அதிகாரிகள், பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை சவாரிக்கு உட்படுத்த தடை விதித்ததோடு குதிரையை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் குதிரை தனிமைப்படுத்தப்படுள்ள காலகட்டங்களில் அதற்கு பரிசோதனை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தெரிவித்துள்ள கால்நடைப் பராமரிப்புத்துறை அதிகாரி இம்தியாஸ் அஞ்சும், குதிரைகள் பாதிப்பை ஏற்படுத்தும் என மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது முன்னெச்சரிக்கையாக குதிரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குதிரையின் உரிமையாளருக்கு வரும் பரிசோதனை முடிவை வைத்தே எதையும் கூறமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் குதிரைக்கு தொடர்ந்து நோய் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.