https://d13m78zjix4z2t.cloudfront.net/maga_0.png

மகாராஷ்டிர அரசை கவிழ்க்க பாஜக முயற்சிக்கவில்லை! - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

by

மகாராஷ்டிர அரசை பாஜக கவிழ்க்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மறுத்துள்ளார்.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
 தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மாநில ஆளுநரை சந்தித்தது இதனை உறுதி செய்வது போல் இருந்தது. ஆனால் பின்னர் அவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவையும் சந்தித்துப் பேசினார்.

இதனிடையே மகாராஷ்டிராவில் முடிவெடுக்கும் அதிகாரம் காங்கிரசிடம் இல்லை என்றும், ஆட்சி வேறு, ஆதரவு தருவது வேறு என்றும் ராகுல்காந்தி கருத்து தெரிவித்திருந்தார். இதனால் கூட்டணியில் சர்ச்சை நிலவுவது போல் தெரிந்தது. ஆனால் தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் ஆட்சியை கவிழ்க்க பாஜகதான் முயற்சி செய்வதாகவும், 3 கட்சிகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. 

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/maa_0.png

இந்நிலையில், செய்தியாளர்களிடம் ஆன்லைன் மூலம் பேட்டியளித்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். உலகிலேயே கொரோனா தொற்றின் ஹாட் ஸ்பாட்டாக மும்பை இருப்பதாக கூறிய அவர், நிலைமையை கட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். 

ராகுல்காந்தியின் கருத்துக் குறித்து பதிலளித்த ரவிசங்கர் பிரசாத், ஒருவேளை சில விஷயங்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கலாம் என்றும், அதுபோல் கூட்டணிக்குள் குழப்பம் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.