https://d13m78zjix4z2t.cloudfront.net/gree.png

பச்சை கருவுடன் கூடிய கோழி முட்டைகள்…எங்கே என்று தெரியுமா?

by

கேரளாவில் கோழி முட்டையில் மஞ்சள் கரு பச்சையாக காட்சியளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஷிகாபுதீன் என்பவரின் பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள் இடும் முட்டைகளில்  மஞ்சள் கருவுக்கு பதிலாக பச்சை கரு இருப்பது கண்றியப்பட்டுள்ளது. இதுபோல கடந்த 9 மாதங்களாக அவரது பண்ணையில் இருக்கும் கோழிகள் இதுபோல் வித்தியாசமாக முட்டைகளை இடுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இது குறித்து பெரிதுபடுத்திக் கொள்ளாத ஷிகாபுதீன், மற்ற கோழிகளும் இதே போல் முட்டையிட ஆரம்பித்ததும் அதிர்ச்சியடைந்தார். 

முட்டைகள் பச்சை நிறத்தில் இருந்ததால் குடும்பத்தினர் அதனை உண்பதை தவிர்த்து வந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதையடுத்து, விஞ்ஞானிகள் இதுதொடர்பான ஆராய்ச்சியை தீவிரப்படுத்தினர்.  பச்சை கருவுடன் கூடிய முட்டைகளை இடும் கோழிகளின் குஞ்சுகளும் அதே போல் முட்டையிட ஆரம்பித்தன. இந்நிலையில் கோழிகளுக்கு கொடுக்கப்பட்ட தீவனங்கள் அல்லது அவை உட்கொண்ட சில தாவரங்களால் இதுபோல் பச்சை நிறமாக மாறியுள்ளதாக ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/k_4.png

 

இதனையடுத்து கோழிகளுக்கு வழக்கமாக கொடுக்கும் தீவனங்களை மாற்றி வேறு உணவுகளை கொடுத்து ஆய்வு செய்தனர். அப்போது கோழிகள் எப்போதும் போல் மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகளை இடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அறிவுறுத்திய தீவனங்களை மட்டும் கோழிகளுக்கு கொடுக்குமாறு உரிமையாளரிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து கோழிகளின் உரிமையாளர் ஷிகாபுதீன் கூறுகையில், ‘நான் கோழிகளுக்கு வழக்கமான தீவனங்களை தான் கொடுத்தேன். ஒருவேளை எங்கள் தோட்டத்தில் வளர்ந்திருக்கும் தாவரங்ளை உண்டதன் மூலம் நிறம் மாறியிருக்கலாம்’ என கூறியுள்ளார். 

ஆனால் உணவில் உள்ள எந்த பொருளால் முட்டையின் கரு பச்சை நிறமாக மாறியுள்ளது என இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இதுதொடர்பாக மேலும் பரிசோதனை நடந்து வருவதாகவும், விரைவில் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.