புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பேருந்துகள்: நடிகர் அமிதாப் ஏற்பாடு!
by dhamotharanமும்பையிலிருந்து உத்தர பிரதேசம் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 10 பேருந்துகளை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஏற்பாடு செய்துள்ளார்.
ஊரடங்கு அமலுக்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்தபின்னரும் புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம் தொடர்கிறது. இன்னும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் பல்வேறு மாநிலங்களில் தவித்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர் திரும்ப அரசு மட்டுமல்லாமல் தனி நபர்களும், தன்னார்வல அமைப்புகளும் உதவி வருகின்றன.
அந்த வகையில் மும்பையில் சிக்கியுள்ள உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப அதே மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் அமிதாப்பச்சன், 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளார். இந்த பேருந்துகள் மும்பையின் ஹாஜி அலி தர்ஹாவிலிருந்து நாளை புறப்படுகின்றன.
இது மட்டுமல்லாமல் ஹாஜி அலி அறக்கட்டளை மற்றும் பிர் மக்தூம் சாஹேப் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து நாள்தோறும் 4,500 உணவு பாக்கெட்டுகளை ஏழை, எளியோருக்கு அமிதாப்பச்சன் வழங்கி வருகிறார். கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறார்.
மேலும் 10,000 குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள், மும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தினசரி 2,000 உணவு பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் 1,200 காலணிகள் வழங்கி வருகிறார். அமிதாப்பின் பிக் பி அலுவலகம் சார்பில் மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், மாநகராட்சி அலுவலகங்களுக்கு சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாப்பு உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அகில இந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு லட்சம் தினசரி கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்திர ரேஷன் வழங்குவதாக அமிதாப் உறுதியளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.