https://d13m78zjix4z2t.cloudfront.net/puzhal.png

அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை

by

2018ஆம் ஆண்டு அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று வரும் பழனி என்பவர் சிறை கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சிறுமியை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரத்தில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த கைதி, பழனி அங்குள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை உடற்கூராய்வுக்காக புழல் போலீசார் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

2018 ஆம் ஆண்டு நடந்த அயனாவரம் சிறுமிக்கான அநீதியானது தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது, இந்தக் குற்றம் தொடர்பாக 24 பேர் விசாரிக்கப்பட்டு, 17 பேர் கைது செய்யப்பட்டனர். 

சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் எம்.சி. சாரங்கன், போலீஸ் இணை கமிஷனர் டி.எஸ். அன்பு, துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய சந்திரிகா விசாரணை நடத்தி, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது, முதற்கட்டமாக 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.

17 பேரில் இருவர் பல்வேறு உடல்நலக்குறைவு காரணமாக இறந்த நிலையில் தற்போது குற்றவாளிகளில் ஒருவரான பழனி, இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பழனி உள்ளிட்ட 4பேர் இந்த வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.