T20 உலகக்கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் அக்டோபரில் ஐபிஎல் தொடர் நடைபெற வாய்ப்பு!
by arunகொரோனா பாதிப்பால் தடைபட்டு போயுள்ள விளையாட்டு தொடர்களில் ஐபிஎல் மிக முக்கியமானதாக உள்ளது. மார்ச் 29ம் தேதி தொடங்கப்பட்டிருக்க வேண்டிய இத்தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகத்தில் இருந்து வரும் நிலையில் எதிர்வரும் உலகக் கோப்பை டி20 தொடர் ஒத்திவைக்கப்படுமானால், வரும் அக்டோபரிலேயே ஐபிஎல் தொடர் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, எனினும் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால் இத்தொடரை ஒத்திவைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக முடிவெடுக்க ஐசிசியின் ஆலோசனை கூட்டம் நாளை வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் நடத்தப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் கலந்தாலோசித்து டி20 உலகக் கோப்பை தொடரை 2022ம் ஆண்டு அக்டோபருக்கு ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாக தற்போது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்படும்.
உலகக் கோப்பை தொடர் ஒத்திவைக்கப்படுமானால் 13 வது ஐபிஎல் தொடர், நடத்தப்பட நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தோனி ரசிகர்கள் உற்சாகம்:
ஐபிஎல் போட்டிகள் அக்டோபரில் நடைபெறுமானால் தோனி ரசிகர்களுக்கு, குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு அது உற்சாகத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம்பெறாமல் ஒதுங்கியிருக்கும் தோனி ஐபிஎல்-லில் களமிறங்கும் உத்வேகத்துடன் இருக்கிறார். ஐபிஎல் போட்டிகள் ஒத்துவைக்கப்படுவதற்கு முன்னதாக அவர் சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.