https://d13m78zjix4z2t.cloudfront.net/jayakumar_54.png

ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்குச் சென்று கபசுரகுடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர்!

by

சென்னை ராயபுரம் மண்டலத்தில் ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்குச் சென்று கபசுரகுடிநீர் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்த பணியை அமைச்சர் ஜெயகுமார், தொற்று நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கபசுரகுடிநீருடன் மூலிகை தேனீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளும் வழங்கப்பட்டன. அப்போது அமைச்சர் ஜெயகுமார், ஆட்டோவை ஓட்டி களபணியாளர்களை உற்சாகபடுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், மக்கள் எண்ணிக்கை அடர்த்தியாக உள்ள இடங்களில் கொரோனா தடுப்பு பணி சவாலாக இருப்பதாக தெரிவித்தார். 

 

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கொரோனா நோய்தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், இந்திய நகரங்களிலேயே சென்னையில்தான் கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில்தான் சித்த மருந்துகள் வழங்கப்படுகிறது என்றும், சமூக வலைதளங்களில் பரவிவரும் தவறான தகவல்களால் மக்கள் குழப்பம் அடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதன் பின்னர் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை நகரில் இருந்த ஆயிரத்து 250 தடை செய்யப்பட்ட பகுதிகள், தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்தார். தற்போது 458 தடை செய்யப்பட்ட பகுதிகள் இருப்பதாகவும், 750க்கும் மேற்பட்ட பகுதிகளில் தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  28 நாட்களில் புதிய தொற்று ஏற்படாமல் இருந்தால் மட்டுமே தடை நீக்கப்படும் என்றும் ஈணையர் பிரகாஷ் கூறினார்.