https://d13m78zjix4z2t.cloudfront.net/borewell01.jpg

மீண்டும் ஒரு சுஜித்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிருக்கு போராட்டம்!

by

தெலங்கானா மாநிலம் பதஞ்சேரு பகுதியில் வசித்து வருபவர் கோவர்தன், இவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் மெடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு விடுமுறைக்காக சென்று தங்கியுள்ளார்.

கோவர்தனின் தந்தை பிக்‌ஷபதி, தனது விவசாய நிலத்தில் கடந்த வாரம் 3 ஆழ்துளை கிணறுகளை தோண்டியுள்ளார். அதில் தண்ணீர் கிடைக்காததால் இன்று அதனை மூடிவிட முடிவெடுத்து மாலை அதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தார். குடும்பத்தினரும் அப்போது உடன் இருந்துள்ளனர்.

அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த கோவர்தனின் 3 வயது மகன் அப்போது 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் மாலை 5 மணிக்கு தவறி விழுந்துள்ளான். இதனால் செய்வதறியாது திகைத்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

உடனடியாக விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியை தொடங்கினர். போர்வெல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டப்பட்டு வருகிறது.

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/01_1.jpg

இதனிடையே இரவு நேரம் ஆகிவிட்டதால் விளக்குகள் பொறுத்தப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குழிக்குள் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்படாமலிருக்க ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் தர்மா ரெட்டி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சந்தனா தீப்தி ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். சிறுவன் 25 முதல் 30 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நடுக்காட்டுப்பட்டி சுஜித்:

கடந்த ஆண்டு இதே போல திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 60 மணி நேரம் மீட்புப் பணிகள் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது நினைவுகூறத்தக்கது.