நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்
முக்கியமான இந்த காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் தொடர்பில் மக்கள் சிந்தித்து செயல்படுவது அவசியமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை வெற்றிகொண்ட தரப்பினராலேயே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியுமென்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி, ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் கொரோனா வைரஸிற்குப் பின்னரான இலங்கை என்ற தொனிப்பொருளில் பிரதமர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு இணங்க 2014ஆம் ஆண்டில் இலங்கையே ஆசியாவில் அபிவிருத்தியில் முன்னணி மிக்க நாடாக திகழ்ந்தது. 2006−2009 யுத்த காலப்பகுதியில் வருடாந்தம் 6 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி வேகம் யுத்தத்திற்குப் பின்னர் 2010−2014 ஆண்டு காலகட்டத்தில் 7.4 சதவீதமாக அதிகரித்தது.
2005 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக 90 சதவீதமாக இருந்த முழு கடன் 2014 இறுதியில் 75 சதவீதமாக குறைவடைந்தது. பங்குச்சந்தையின் விலைச்சுட்டு 2005 இல் 1,922 ஆக இருந்ததுடன் அது 2014 இறுதியில் 7,299 ஆக அதிகரித்திருந்தது. 2005 இல் 1,242 அமெரிக்க டொலராக இருந்த தனிநபர் வருமானம் 2014 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் 3819 அமெரிக்கடொலர் என மும்மடங்காக அதிகரித்தது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் பாரிய உட்கட்டமைப்பு நிர்மாண வேலைத்திட்டங்கள் 2006−2014 கால கட்டத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அனைத்து பொருளாதார வெற்றிகளையும் நாம் 2007 உலக உணவு நெருக்கடி நிலமையிலேயே அடைந்துள்ளோம். 2008−2009 உலக நிதி நெருக்கடியும் உலக வரலாற்றிலேயே பாரிய எரிபொருள் விலை அதிகரிப்பும் ஏற்பட்டன. 2006−2009 காலப்பகுதிகளில் உலகச் சந்தையில் எரிபொருள் பெரல் ஒன்றின் விலை 74 அமெரிக்க டொலராக இருந்த நிலையில் 2010−2014 காலகட்டங்களில் அது 103 டொலராக அதிகரித்தது.
2015 ஜனவரியில் அவை அனைத்தும் தலைகீழாக மாறியது. அந்த ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் ஐந்து சதவீதமாக குறைவடைந்ததுடன் அதற்கு அடுத்த வருடங்களில் அப்படியே குறைந்து கடந்த வருடத்தில் அது 2.3 வீதமாக குறைவடைந்தது. ரூபாவின் பெறுமதிக்கு இணங்க அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 2014ஆம் ஆண்டு 130 ரூபாவாக இருந்த நிலையில் 2019 அக்டோபர் மாதம் அது 181 ஆக அதிகரித்தது. நாட்டின் மொத்த கடன் சுமை 2014 இறுதியில் 7.39 ட்ரில்லியன் ரூபாவாக இருந்த நிலையில் 2019 அக்டோபர் மாதத்தில் அது 12.89 ட்ரில்லியனாக 74.4 விதமாக அதிகரித்துள்ளது.
2015 ஜனவரியிலிருந்து 2019 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நல்லாட்சி அரசாங்கம் ´ சவரின் பொன்ட்´ அபிவிருத்தி பிணைமுறி, சிண்டிகேடட் லோன், கரன்சி ஸ்வோப் என நிதி நிறுவனங்களில் 26 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாக பெற்றிருந்தது. நல்லாட்சி அரசாங்கம் இந்தளவு கடன்களை பெற்றிருந்த நிலையில் எந்தவொரு வருமான மார்க்கத்தையும் உருவாக்கவில்லை. 2014ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் 7,299 ஆக இருந்த பங்குச் சந்தையின் பொது விலைச்சுட்டு 2019 அக்டோபர் மாதமளவில் 5,990 வரை குறைவடைந்தது.
இந்தளவு பொருளாதார வீழ்ச்சி 2015−2019 காலகட்டங்களில் இடம்பெற்றதுடன் அக்காலத்தில் மசகு எண்ணை பெரல் ஒன்றின் விலை 60 அமெரிக்க டொலராக வரலாற்றிலேயே மிகக் குறைந்த விலையில் காணப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் இந்தளவு பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு எந்தவித வெளிக் காரணங்களும் கிடையாது. இந்த 2015−2019 காலகட்டங்களில் இந்தியா, பங்காளதேஷ் போன்ற நாடுகள் வேகமான வளர்ச்சியை கண்டன.
அதேவேளை 2019 ஏப்ரல் குண்டுவெடிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளவில்லை. அந்த வகையில் 2019 நவம்பர் 16ஆம் திகதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பொருளாதாரம் முழுமையாக சீர்குலைக்கப்பட்டு இருந்த நாட்டையே பொறுப்பேற்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் முழு உலகினதும் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சூழ்நிலையானது 1930 காலகட்டங்களில் நிலவிய மிக மோசமான பொருளாதார நிலமைக்கு ஒப்பானதாக அமையலாமென எதிர்வு கூறப்படுகிறது.
இந்தநிலையில் முழு உலகமும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ள நிலையில் இலங்கையர்கள் சௌபாக்கியம் தேடி வெளிநாட்டுக்குச் செல்வதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே எமது மாற்று வழியாகும். இதில் கொண்டுள்ள இந்த அச்சுறுத்தலிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் நாட்டின் எதிர்காலம் இருள் மிக்கதாகிவிடும்.
அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர தமது சம்பளத்தில் கணிசமான அளவை அன்பளிப்பு செய்துள்ளதுடன் அரசாங்க ஊழியர்களிடம் அது தொடர்பில் அவர் வேண்டுகோள் விடுத்தபோது எதிர்க்கட்சி அதனை விமர்சனமாக முன்னெடுத்தது. சுயமாக தமது சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை வழங்க முடியுமா என அவர் வேண்டுகோள் விடுத்த போதும் அதனை சரியாக புரிந்து கொண்டிருந்த நிலையிலும் எதிர்க்கட்சியினர் கட்டாயமாக சம்பளத்தில் ஒரு தொகை வெட்டப்படுமென பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
பீ.பி ஜயசுந்தர 2006−2014 காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்த அரச அதிகாரியாவார். அத்தகைய திறமையான அதிகாரி மீது சேறு பூசி நாட்டின் பொருளாதார எழுச்சி வேலைத்திட்டத்தை முழுமையாக சிதைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எனவே சேறு பூசுதல் மற்றும் பொய் பிரசாரங்களை மேற்கொள்ளும் நல்லாட்சி அரசியல் கலாசாரத்திற்கு உலகின் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலையில் இந்த இடமும் கிடைக்கப்போவதில்லையென்பது எனக்கு தெரியும்.
எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் உலக நிலைமைகளின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் எமது பிள்ளைகளின் எதிர்காலம் ஆகியவை நாட்டை ஆட்சி செய்யும் திறமை படைத்தவர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. ஜேர்மன் சிறந்த பலமிக்க பொருளாதாரத்தை கொண்டிருந்த வேளையிலேயே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேர்ந்ததால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்ததென ஜேர்மன் உயர்ஸ்தானிகர் எஞ்சலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை அதற்கு மாறான ஒரு நிலையிலேயே இந்த வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
இந்த முக்கியமான தருணத்தில் இலங்கையில் அனைத்து பிரஜைகளும் நிலைமை தொடர்பு சரியாக சிந்தித்து மிகவும் பொருத்தமானவர்களை தெரிவு செய்வது அவசியமாகும். கொரோனா வைரஸ் நாட்டை பாதித்துள்ள நிலையில் நாட்டை நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் செய்திருந்தால் எதிர்கொள்ள நேரும் விளைவை நான் கூற வேண்டியதில்லை. தற்போது நாட்டை ஆட்சி செய்யும் ஜனாதிபதியும் ஏனையவர்களும் யுத்தத்தை வெற்றி கொண்டவர்கள். பாரிய சவால்களுக்கு மத்தியில் சுதந்திரத்தின் பின் நாட்டை பாரிய பொருளாதாரத்தில் கட்டியெழுப்பிய குழுவினராகும்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் இலங்கையை உலகின் முன்னணி நாடாக முன்னேற்றுவது அத்தகைய தலைவர்கள்தான் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.