https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2546470.jpg

19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை : 'தமிழகத்தில், 19 மாவட்டங்களில், இன்று (மே 26) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில், வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த, 48 மணி நேரத்தில், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யும்.

மேலும், விருதுநகர், ராமநாதபுரம், துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதில், விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யலாம்.

https://img.dinamalar.com/data/gallery/gallerye_042211794_2546470.jpg

அனல்காற்று

கரூர், ஈரோடு, வேலுார், ராணிப்பேட்டை, மதுரை, திருச்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், அதிகபட்ச வெப்ப நிலை, 42 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும். இதனால், அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும். எனவே, இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள், பகல், 11:30 முதல், பிற்பகல், 3:30 வரை வெளியில் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'அக்னி' நிறைவு

மே, 4ல் துவங்கிய அக்னி நட்சத்திரம், நாளை முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில், நேற்று அதிகபட்சமாக, கரூர் மாவட்டம் பரமத்தி, வேலுார், திருச்சி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய இடங்களில், 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. சேலத்தில், 41;மதுரையில், 40 டிகிரிசெல்ஷியசாக வெப்ப நிலை இருந்தது.சென்னை நுங்கம்பாக்கத்தில், 38; மீனம்பாக்கத்தில், 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

சென்னையில்,இன்று அதிகபட்ச வெப்பநிலை, 37 டிகிரி செல்ஷியசாக இருக்கும் என,அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE