https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/GoodsTrain.jpeg

சங்ககிரி அருகே தடம்புரண்டது சரக்கு ரயில்

by

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள நட்டுவம்பாளையத்தில் சரக்கு ரயில் எஞ்சினின் முன்பகுதியில் உள்ள நான்கு சக்கரங்கள் இன்று (திங்கள்கிழமை) இரவு தடம்புரண்டன.

சங்ககிரியை அடுத்த நாரணப்பன்சாவடியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கிடங்கிற்கு கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து ரயில் மூலம் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் கொண்டு வரப்படுகின்றன. வழக்கம்போல் திங்கள்கிழமை 50 பெட்டிகளுடன் பெட்ரோலியப் பொருள்களை கிடங்குகளில் இறக்கிவிட்டு, இரவு மீண்டும் ஈரோடு வழியாக எர்ணாகுளம் புறப்பட முற்பட்டது. 

அப்போது திரும்பி செல்வதற்காக சங்ககிரி ரயில் நிலையத்திலிருந்து சேலம் நோக்கி எஞ்சின் சென்று கொண்டிருந்தது. சங்ககிரி ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக எஞ்சினின் முன்பகுதியில் உள்ள நான்கு சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து தரை தளத்திற்கு இறங்கின. இதையடுத்து, ரயில் நிறுத்தப்பட்டது.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/5/25/WhatsApp_Image_2020-05-25_at_9.59_.24_PM_.jpeg
சங்ககிரி ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு எஞ்சினின் முன்பகுதியில் தண்டாவளத்தில் இருந்து இறங்கி நிற்கும் சக்கரம்

இதைத் தொடர்ந்து, ஈரோட்டிலிருந்து பழுது நீக்கும் ரயில் வரவழைக்கப்பட்டது. அதேசமயம், மற்ற ரயில்களை மாற்றுப்பாதைகளில் திருப்பி விடும் பணியை ரயில்வே துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது கரோனா தொற்று பொது முடக்கத்தையொட்டி பயணிகள் ரயில்கள் சேவை இல்லாததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து ஈரோடு ரயில்வே காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.