சாயல்குடி அருகே பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்: அதிகாரிகள் கவனிப்பார்களா?
சாயல்குடி: சாயல்குடி அருகே செவல்பட்டி சாலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. குழாய் உடைப்பை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 616 கோடி மதிப்பீட்டில் கடந்த 2009-10ம் ஆண்டுகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. திருச்சி கொள்ளிடம் ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைத்து அங்கிருந்து பைப் லைன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து, சிவகங்கை, பரமக்குடி, முதுகுளத்தூர் வழியாக கடலாடி, சாயல்குடி ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 150 கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
சாயல்குடி ஜம்பிலிருந்து எஸ்.டி சேதுராஜபுரம், எஸ்.தரைக்குடி, முத்துராமலிங்கபுரம், வாலம்பட்டி, கொக்கரசன்கோட்டை, கொண்டுநல்லான்பட்டி, செவல்பட்டி, வி. சேதுராஜபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவல்பட்டி, முத்துராமலிங்கப்புரம் விலக்கு ரோடு அருகில் செல்லும் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். இதனால் கிராமமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே பைப் லைனில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரி செய்து குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.