மன்னார் பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை

by

மன்னார்-நானாட்டன் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அறுகம் குன்று கிராமத்தில் உள்ள சில குடும்பங்கள் அடிப்படை வசதிகள் உட்பட வீடுகளின்றி மிகவும் வறுமை பட்ட நிலையில் 'கொரோனா' அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக அன்றாட கூலி தொழிலையும் இழந்து மிகவும் வறுமையில் வாடிய நிலையில் குறித்த மக்களின் பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம் ஊடகங்கள் ஊடாக வெளி கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த மக்களின் பிரச்சினை தொடர்பாக உடனடியாக செயற்பட்ட நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் அறுகம் குன்று பகுதிக்கு விஜயம் மேற்கொண்டதுடன்,பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்தித்து அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அந்த அடிப்படையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான நீர் மற்றும் மின்சார வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டதுடன், அவர்களுக்கான காணிகளின் உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் அவர்களுக்கான சமூர்த்தி கொடுப்பனவு மற்றும் அரச வீட்டு திட்டம் தொடர்பான நிலைமையையும் நேரடியாக மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.