மலையாள சினிமா படப்பிடிப்புக்காக கோயில் முன் போடப்பட்ட சர்ச் செட் தகர்ப்பு: எர்ணாகுளம் அருகே பரபரப்பு
திருவனந்தபுரம்: எர்ணாகுளம் அருகே மலையாள சினிமாவுக்காக ரூ.80 லட்சம் செலவில் கோயில் முன் போடப்பட்ட சர்ச் செட்டை இந்து அமைப்பினர் தகர்த்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் ‘மின்னல் முரளி’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஸ்னேகா பாபு, அஜு வர்க்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன், பைஜூ சந்தோஷ் உட்பட முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தை, பிரபல இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கி வருகிறார்.
இந்த படத்துக்காக எர்ணாகுளம் அருகே காலடி மகாதேவர் கோயில் முன் சர்ச் வடிவில் செட் அமைக்கப்பட்டது. ரூ.80 லட்சம் மதிப்பில் தத்ரூபமாக இந்த செட் போடப்பட்டது. பொதுமுடக்கம் தொடங்குவதற்கு முன்பே அனைத்து பணிகளும் முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் தருவாயில் இருந்தது. ஆனால் அதற்குள் லாக்-டவுன் அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. இதற்கிடையே கோயில் முன் சர்ச்சுக்கான செட் போட இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக போராட்டமும் நடந்தது. இந்த நிலையில் நேற்று இந்த செட்டை ஒரு கும்பல் சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து எர்ணாகுளம் மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பின் தலைவர் ஹரிபாலோடு தனது பேஸ்-புக் பதிவில் கூறியிருப்பது: காலடியில் மகாதேவனின் முன் சர்ச்சுக்கான செட் போடப்பட்டபோதே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். பலரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எங்களுக்கு ெகஞ்சி பழக்கமில்லை. இதனால் அந்த செட்டை தகர்க்க தீர்மானித்தோம். இதில் பங்கெடுத்த பஜ்ரங்தள் தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து இயக்குநர் பேசில் ஜோசப் கூறுகையில், எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.
சிலருக்கு இது வேடிக்கையாக இருக்கலாம். விளம்பரத்துக்காக பலரும் பல செயல்களில் ஈடுபடுகின்றனர். இது எங்களுக்கு ஒரு கனவாகும். திடீரென லாக்-டவுன் அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தாமதமானது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த படத்துக்கு நான் மிகவும் சிரமப்பட்டு பணிபுரிந்து வருகிறேன். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் வியர்வை சிந்தி இந்த செட்டை அமைத்தனர். பல்வேறு தரப்பில் இருந்தும் அனுமதி பெற்றே செட் போடப்பட்டது. இப்படி ஒரு சம்பவம் கேரளாவில் நடக்கும் என நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்றார்.
படத்தயாரிப்பாளர் ஷோபியா பால் கூறியது: இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. காலடியில் அனுமதி பெற்றே செட் போடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசித்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.