http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__731289088726044.jpg

பாதிப்பு எண்ணிக்கை 54 ஆனது; குமரியில் பைக், லாரிகளில் ரகசியமாக நுழைபவர்களால் பரவும் கொரோனா: கண்காணிப்பை தீவிரப்படுத்தாவிடில் ஆபத்து

நாகர்கோவில்: குமரியில் ரகசியமாக நுழைபவர்களால் கொரோனா வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் நேற்று மாலை வரை 11,887 பேர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 11,450 பேருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை. மீதமுள்ள 383  நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 27 பேர் சிகிச்சையில் உள்ளனர். குமரி மாவட்டத்தில் மொத்தம் 342 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட 54 பேரில், ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

26 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 27 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த 27 பேரும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து தொற்று உறுதியானவர்கள் ஆவர். ஆரல்வாய்மொழி, களியக்காவிளை சோதனை சாவடிகளில் இவர்கள் தடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று உறுதியானது. இந்த நிலையில் சோதனை சாவடிகளில் சிக்காமல் மாற்று பாதைகளில் ரகசியமாக நுழைபவர்களால் தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளது. நேற்று கன்னியாகுமரி அச்சன்குளத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர், அவரது மகள் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

இவர்கள் சென்னையில் இருந்து பைக்கில், அஞ்சுகிராமம், மயிலாடி வழியாக மாவட்டத்துக்குள் நுழைந்தனர். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் கடந்த 23ம் தேதி மகாராஷ்டிராவில் இருந்து லாரி மூலம் ரகசியமாக வந்த முளங்குழி குழிச்சவிளை பகுதியை சேர்ந்த 22 வயது நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது அச்சன்குளம், குழிச்சவிளை பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாறி உள்ளன. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை ஆரல்வாய்மொழி, களியக்காவிளை மட்டுமே நுழைவு வாயில்களாக உள்ளன.

இருப்பினும் சென்னை உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து வருபவர்கள் அஞ்சுகிராமம் வழியாக உள்ளே நுழைகிறார்கள். அஞ்சுகிராமத்தில் போலீஸ் கண்காணிப்பு இருந்தாலும் கூட, கார்களில் வருபவர்களை மட்டும் தான் ஆரல்வாய்மொழி வழியாக செல்லும் படி திருப்பி அனுப்பி விடுகிறார்கள். பைக்கில் வரும் நபர்கள், ஏதாவது பொய்யான காரணங்களை கூறிக்கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்தாமல், மாவட்டத்துக்குள் நுழைந்து விடுகிறார்கள். இதனால் இவர்களுக்கு தொற்று இருந்தால், அந்த பகுதி முழுவதுமே அடைக்கப்படும் நிலை உள்ளது. ரகசியமான நுழைபவர்களால் பெரும் ஆபத்து உருவாகி உள்ளது.

ஏற்கனவே சென்னை கொரோனாவால் திணறி வரும் நிலையில், குமரி மாவட்டத்திலும் அது போன்ற நிலை உருவாகி விடக்கூடாது. எனவே கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.