ஜூன் 12-ல் மேட்டூர் அணைத் திறப்பு; முறைகேடுகளுக்கு இடம் தராமல் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை
சென்னை: ஜூன் 12ல் மேட்டூர் அணைத் திறப்பு என அறிவித்துவிட்டு இப்போது தூர்வாரும் பணிகளை அறிவித்திருக்கிறது அரசு அலட்சியம் செய்கிறது என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்னமும் 18 நாட்களில் தூர்வாரிவிட முடியுமா? கடைமடைக்கும் நீர் சேருமா? கண்காணிப்பு குழுக்களில் விவசாயப் பிரிதிநிதிகளையும் சேர்த்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவது; இந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குகின்ற ஒரே ஒரு ஆட்சி, அதை அறிமுகப்படுத்திய ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்.
விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் வேளாண் தொழில் வளர்ச்சிக்காகவும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முன்னோடியாகத் தமிழ்நாட்டில்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தொலைநோக்குத் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டு - விவசாயிகளுக்கு உதவும் கரங்களாக விளங்கியது. ஆனால் இன்றைக்கு தும்பை விட்டு வாலைப்பிடிப்பது போல், ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அறிவித்துவிட்டு - இப்போது தூர் வாரும் பணிகளை அறிவித்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் அணை திறக்கப்படும். அதற்குரிய நீர் இருப்பு அணையில் இருக்கிறது என்பது இந்த அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும் அது பற்றி பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவும் இல்லை; கவலைப்படவும் இல்லை.
மாறாக நெடுஞ்சாலைத் துறையில், எப்படி கொரோனா காலத்திலும் டெண்டர் விடுவது அந்த டெண்டரில் எப்படி ‘ரேட்டை' உயர்த்திப் போட்டு ஊழலுக்கான ஊற்றுக்கண்ணை மேலும் பெருக்கிக் கொள்வது என்பன போன்றவற்றில் மட்டுமே தீவிரக் கவனம் செலுத்தி வந்தது, தற்போது உயர்நீதிமன்ற விசாரணைக்கே போய் விட்டது. இந்நிலையில் காவிரி டெல்டா பகுதி வேளாண்மைக்கான நீர்ப்பாசனத்திற்கு மிக முக்கியமான கால்வாய் தூர் வாரும் பணிகளை அறிவித்து அந்தப் பணிகளைக் கண்காணிக்கச் சிறப்பு அதிகாரிகளையும் நியமித்திருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
வழக்கம் போல் அதிகாரிகளை நியமித்து அவர்களிடமிருந்து ஆய்வு அறிக்கைகள் பெற்று தூர்வாரும் பணிகள் அமோகமாக நடந்து விட்டது போன்ற கற்பனை தோற்றத்தை உருவாக்கி கணக்கு காட்ட முயற்சிக்காமல் மேற்கண்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் கண்காணிப்புக்குழுவில் இடம்பெறச் செய்து; கால்வாய் தூர் வாரும் பணிகளில் எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் வெளிப்படையாகவும் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் குறுவை சாகுபடிக்கு உண்மையிலேயே கடைமடை வரை தங்கு தடையின்றி, பயன்பட்டிடும் வகையில் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என தனது அறிக்கையில் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.