சிங்கம்பட்டி ஜமீன்தார் உடல் தகனம்
by DINஅம்பாசமுத்திரம்: சிங்கம்பட்டி சமஸ்தான 31ஆவது மன்னர் பட்டம் பெற்ற டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி உடல் திங்கள்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.
தமிழகத்தின் பழைமையான சமஸ்தானமாகிய சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31ஆவது மன்னர் பட்டம் பெற்ற டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி மே 24 ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவுச் செய்தியறிந்து திங்கள்கிழமை காலை முதல் ஏராளமானவர்கள், அவரது உடலுக்கு மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் இறுதி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு அரண்மனையிலிருந்து டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தாமிரவருணி நதிக்கரையில் உள்ள மயானத்தில் அவரின் இரண்டாவது மகன் சங்கர் ஆத்மஜன் அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்து உடலுக்கு எரியூட்டினார்.
மேலும் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.முருகையாப்பாண்டியன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா, பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக மாவட்ட்ச் செயலர் ரா. ஆவுடையப்பன், மதிமுக மாவட்டச் செயலர் தி.மு.ராசேந்திரன், ராமநாதபுரம் மன்னர் பரம்பரை குமரன் சேதுபதி மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்புத் தலைவர்கள், ஊர்ப்பொதுமக்கள் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.