தேர்தல்கள் ஆணைக்குழுவில் கருத்து வேறுபாடுகளால் சந்தேகம்! சட்டத்தரணி ஏ.எல்.எம் றிபாஸ்
by Varunan, Dhayaniதேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ளவர்களிடையே உருவாகும் கருத்து ரீதியான வேறுபாடுகளால் இந்த ஆணைக்குழுவின் தேவைப்பாடுகள் தொடர்பில் சந்தேகம் எழுகிறது என அம்பாறை மாவட்ட தேசிய காங்கிரஸின் சட்ட விவகார செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம் றிபாஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் அறிவிக்கப்பட்ட தேர்தல் தொடர்பில் கொரோனா தாக்கத்தினால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாட்டில் நடைமுறையிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் கூல் தேர்தல் நடாத்தப்படுவது தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தொடர்பிலும் அவர் தேர்தல் ஆணைக்குழு அல்லாமல் தனிப்பட்ட ரீதியில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அவர் இந்த தேர்தல் ஆணைக்குழுவின் பரப்புகளை மீறி கருத்துக்களை கூறி வருகின்றார்.
இதனால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்.நாட்டின் ஜனநாயக கடமை மக்களின் வாக்குரிமை என்பதும் நிலை நிறுத்தப்பட வேண்டிய ஒன்றுதான் கொரோனா வைரஸின் தாக்கம் உலகலாவிய ரீதியில் பரவிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் தென் கொரியா நாட்டிலும் தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கிறது.
அதே நேரத்தில் எமது நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொறிமுறைகளை அரசு கையாண்டு ஜனநாயக உரிமைகளை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக தேர்தல்களை பிற்போட்டிருக்கிறது.
இந்த அரசாங்கம் கொரோனா வைரஸுக்கான மருந்துகளை கண்டு பிடிக்கும் வரை தேர்தலை ஒத்திவைக்கவும் முடியாது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில் நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக அங்கீகாரத்தை பெறுவதற்கான தேவை அரசுக்கு இருக்கின்றது.
அரசு எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடியான சூழ்நிலையில் ஜனநாயக உரிமைகளை காப்பதற்காக 19 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் அம்மூன்று உறுப்பினர்களுக்கும் இடையிலான முரண்பட்ட கருத்துக்கள் எழுகின்ற நேரத்தில் அந்த ஆணைக்குழுவின் அவசியத்தின் தேவை கேள்விக்குட்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.
எவ்வாறெனில் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழு தேவையா என்ற எண்ணப்பாடுகளும் தோற்றம் பெறுகிறது.எனவே தான் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, பேராசிரியர் ரத்னம் ஜீவன் கூல் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.