ஊரடங்குச் சட்டம் காரணமாக வெறிச்சோடிய மட்டக்களப்பு மாவட்டம்
by Kumar, Dhayaniகொரோனா அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு இரண்டாவது தினமான இன்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்க்கிழமை காலை வரையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.
இந்த ஊரடங்கு சட்டத்தினை கடுமையான முறையில் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினரும், பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பொலிஸாரும், படையினரும் வீதிரோந்து பணிகளை முன்னெடுத்துள்ளதுடன், வீதிச்சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
சுகாதார பிரிவினரின் நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெற்று வரும் நிலையில் ஏனைய பிரிவுகளின் செயற்பாடுகள் முற்றாக முடங்கியுள்ளன.
மருந்து விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துகளும் முற்றாக முடங்கியுள்ளன.