போக்குவரத்து விதி மீறல் வழக்கு : ஆன்லைன் வழியாக அபராதம்
சென்னை: போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராத தொகையை, 'ஆன்லைன்' வழியாக நீதிமன்றங்களில் செலுத்தும் வசதியை, உச்ச நீதிமன்ற நீதிபதி இன்று துவக்கி வைக்கிறார்.
சாலை விதிகளை மதிக்காமல், வாகனங்களில் செல்பவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். அதி வேகமாக ஓட்டுவது; 'சிக்னல்' மீறி செல்வது; தலை கவசம் அணியாமல் செல்வது போன்ற காரணங்களுக்காக, வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு விதி மீறலில் ஈடுபடுபவர்களுக்கு, 'இ - சலான்' முறையில் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
அபராத தொகையை, போக்குவரத்து போலீசார் வகுத்துள்ள முறைப்படி செலுத்தலாம்; மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலும் நேரில் செலுத்தலாம். நீதிமன்றங்களுக்கு நேரில் செல்லாமல், ஆன்லைன் வழியாக அபராதம் செலுத்தும் திட்டத்தை, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, டி.எஸ்.சிவஞானம் தலைமையில், நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, எம்.சுந்தர், ஜெகதீஷ் சந்திரா, சி.சரவணன் அடங்கிய கணினி குழு உருவாக்கி உள்ளது.
இத்திட்டத்தின்படி, விதிமீறலில் ஈடுபடுவோரின் வாகன எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள், 'விர்சுவல் கோர்ட்ஸ்' என்ற இணையதளத்தில் பதிவிடப்படும். பின், வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணுக்கு, தகவல் அனுப்பப்படும். அதன் அடிப்படையில், அபராத தொகையை, ஆன்லைனில் செலுத்தலாம். சென்னையில், இத்திட்டத்தை, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், டில்லியில் இருந்தபடி காணொலி காட்சி வழியாக துவக்கி வைக்கிறார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதிகள் பங்கேற்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE