பார்லி., குழு கூட்டம்; வெங்கையா ஆய்வு
புதுடில்லி: ஊரடங்கால் நடத்தப்படாமல் இருந்த, பார்லிமென்ட் நிலைக் குழு கூட்டங்களை நடத்துவது குறித்து, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு ஆய்வு செய்தார்.
பார்லி.,யில், 31 துறைகள் சார்பில் நிலைக் குழுக்கள் உள்ளன. இதில், ராஜ்யசபாவை சேர்ந்த, 10 மற்றும் லோக்சபாவை சேர்ந்த, 21 எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதைத் தவிர வேறு சில நிலைக் குழுக்களும் உள்ளன. ஊரடங்கு உத்தரவால், இந்த நிலைக் குழுக்களின் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் கூட்டத்தை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், பல சாதக, பாதகங்கள் இருந்ததால், அது நடைபெறவில்லை.
இந்நிலையில், தற்போது, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து துவங்கியுள்ளது. அதையடுத்து, நிலைக் குழுக்கள் கூட்டங்கள் நடத்துவது குறித்து, வெங்கையா நாயுடு, சமீபத்தில் ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில், லோக்சபா சபாநாயகர், ஓம் பிர்லா, இரு சபைகளின் செயலர்கள், மத்திய பார்லி விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், நிலைக் குழு கூட்டங்கள் நடைபெறும் அறைகளில் வசதிகள் செய்ய, வெங்கையா அறிவுறுத்தினார். மேலும், ராஜ்யசபாவுக்கு சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, 37 பேர் பதவியேற்பது குறித்தும் ஆராயப்பட்டது. ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள, 18 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்தும், தேர்தல் ஆணையத்துடன், வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE