https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2546002.jpg

பனிப் போரை துவங்குகிறது:அமெரிக்கா மீது சீனா பாய்ச்சல்

பீஜிங்,: 'அமெரிக்கா - சீனா இடையேயான உறவை, புதிய பனிப் போராக மாற்றும் வகையில், அமெரிக்கா செயல்படுகிறது' என, சீனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது.

'கொரோனா' வைரஸ் உருவானது தொடர்பாக, சர்வதேச விசாரணைக்கு தயாராக உள்ளதாகவும், சீனா கூறியுள்ளது.'கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் மற்றும் வெளியுறவு அமைச்சர், மைக் போம்பியோ, தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்து வருகிறது.இந்நிலையில், சீனாவின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை வழங்கும், தேசிய மக்கள் மன்றத்தில் கூட்டம் நடந்து வருகிறது.

அப்போது, சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ கூறியதாவது:சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போதும் உள்ளது. ஆனால், அமெரிக்காவில், அரசியல் வைரசை பரப்பி வருகின்றனர். அமெரிக்கா - சீனா உறவை பிணை வைத்து, சில அமெரிக்க அரசியல்வாதிகள், புதிய பனிப் போரை துவக்கியுள்ளனர்.அந்த அரசியல்வாதிகள், அடிப்படை உண்மைகளை மறந்து, மறைத்து, பொய் தகவல்களையும், தங்களுடைய சதி கொள்கை களையும் வெளிப்படுத்துவது வேதனை அளிப்பதாக உள்ளது.

சீனாவின் இறையாண்மைக்கு எதிராக, சீன மக்களின் கடின உழைப்புக்கு எதிராக வெற்றி பெறலாம் என்று அவர்கள் நினைத்தால், அது பகல் கனவாகவே இருக்கும். மேலும், அவர்கள் தங்களைத் தாங்களே அவமதித்து கொள்கின்றனர்.வைரசால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு ஆதரவாக, ஆறுதலாக இருக்க வேண்டிய நிலையில், எங்களுக்கு எதிராக செயல்படுவது, அமெரிக்க அரசியல்வாதிகளின் உண்மையான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வைரசுக்கு எதிராக, அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும்.இந்த வைரஸ் உருவானது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் மூலமாக, நிபுணர்களால், நேர்மையான முறையில், பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்த முன்வந்தால், அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, 'கொரோனா வைரஸ் பரவலால், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான குணம் தெரிய வந்துள்ளது. சர்வாதிகார போக்குடன் அது செயல்படுகிறது' என, மைக் போம்பியோ கூறியுள்ளார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE