கொரோனா ஊரடங்கு வழக்குகள்:தமிழக அரசு ரத்து செய்யுமா ?
மதுரை :கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, தமிழகத்தில், 4.74 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை, பொதுமக்கள் நலன் கருதி ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
தமிழகத்தில், மார்ச், 23 மாலை, 6:00 மணி முதல், 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டது.
அத்தியாவசிய தேவைகளின்றி, 'சும்மா' வெளியே வந்தவர்கள் மீது, 1897 தொற்று நோய் தடுப்புச்சட்டம், 1860ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டம், 188 பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ரூ.4.74 லட்சம்
தொற்றுநோய் பரப்பும் வகையில் செயல்பட்டதாக, இ.த.ச., பிரிவு, 270ன் கீழ் கடை உரிமையாளர்கள் மீதும், தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இத்துடன், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவும், சேர்த்துக் கொள்ளப்பட்டது.
நேற்று முன்தினம் வரை, தடை உத்தரவை மீறியதாக, 4.74 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை, இ.த.ச., பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், இதில் தொடர்பு உடையவரின் பாஸ்போர்ட் முடக்கப்படும்.அவர்கள், அரசு பணியில் சேர, தேர்வு எழுத முடியாது. தனியார் நிறுவனங்களில் சேர, போலீசாரின் தடையில்லா சான்று கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுஉள்ளது.
கோர்ட்டில் தீர்வு
இது குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எல்லா வழக்குகளுமே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதிவு செய்யப்பட்டன. கொரோனா முடிந்த பின், பொதுமக்கள் நலன் கருதி, வழக்குகளை அரசு ரத்து செய்ய வாய்ப்புள்ளது.
அரசு ஊழியரை தடுத்தல், மிரட்டல் குறித்த வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படாமல், தொடர்ந்து, நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும். கொரோனா தொடர்பாக, பதிவான அனைத்து வழக்குகளையும் அரசு ரத்து செய்யாத பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்று, தீர்வு காணலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE