https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2546125.jpg

சீனாவை சமாளிக்க எல்லைக்கு கூடுதல் தளவாடங்கள்: ராணுவம் நடவடிக்கை

புதுடில்லி: எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறல்களால் பதற்றம் நிலவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் படைகளுடன் நவீன ஆயுதங்களையும் நம் ராணுவம் அனுப்பியுள்ளது. இது பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

இந்தியா - சீனா 3488 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. லடாக்கில் எல்லைப் பகுதியில் ராணுவத்துக்காக சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் சீன ராணுவம் இப்பகுதியில் அத்துமீறி நுழைந்தது; அதை தடுக்க நம் படைகள் உடனடியாக விரைந்தன.

இரு நாட்டு படைகளும் எல்லையில் முகாமிட்டுள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.இந்நிலையில் சீன ராணுவம் ஐந்தாயிரம் வீரர்களை எல்லையில் குவித்துள்ளது. பேன்காங் சோ நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ராணுவ தளவாடங்களையும் குவித்துள்ளது.
அதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நம் ராணுவமும் கூடுதல் வீரர்களை அனுப்பியுள்ளது. மேலும் ராணுவத் தளவாடங்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே சீன ராணுவம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு 'டென்ட்'கள் அமைத்து சீன ராணுவத்தினர் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையடுத்து கூடுதல் படைகள் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.இதையடுத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காணும் வகையில் சீன ராணுவத்தின் உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் ஆனால் சீனா விடாப்படியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சீனாவின் முயற்சிகளை முறியடிப்பது குறித்து நம் ராணுவத் தளபதி எம்.எம். நரவானே மூத்த அதிகாரிகளுடனும் மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்.

இதற்கிடையே 2012ல் மத்திய பிரதேசத்தில் உள்ள ராணுவ போர்க் கல்லுாரியில் அப்போது பேராசிரியராக இருந்த நரவானே சீன ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்த ஒரு ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்திருந்தார்.அதில் 'சீன ராணுவம் நிலப்பரப்பை ஆக்கிரமிக்க முதலில் சிறிய சாகசங்களில் ஈடுபடும்; பின் தன் ராணுவத்தை அனுப்பி மிரட்ட பார்க்கும்; அதன்பிறகே ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும்' என குறிப்பிடடுள்ளார்.

மேலும் 'முதல் இரண்டு வாய்ப்புகளிலேயே சீனாவின் முயற்சியை முறியடித்து விட வேண்டும்' என்றும் அவர் கூறியிருந்தார்.சீன ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து நரவானேவிற்கு அத்துபடி என்பதால் இந்தப் பிரச்னையை அவர் சிறப்பாக சமாளிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு திரும்ப உத்தரவு

இந்தியாவில் உள்ள தன் நாட்டினரை நாடு திரும்பும்படி சீனா கூறியுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. இது தொடர்பாக டில்லியில் உள்ள சீன துாதரகம் வெளியிட்டுள்ள செய்தி: கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து உள்ளது. அதனால் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலாப் பயணியர் தொழில்முனைவோர் உள்ளிட்டோர் நாடு திரும்ப சிறப்பு விமானம் இயக்கப்படும். இதற்காக வரும் 27ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஆனால் எப்போது இந்த விமானம் இயக்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. எல்லையில் பதற்றம் நிலவும் சூழ்நிலையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE