https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2545984.jpg

2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்கியது

புதுடில்லி : கொரோனா வைரஸ் பிரச்னையால் முடங்கியிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து, இரண்டு மாதங்களுக்குப் பின், நேற்று மீண்டும் துவங்கியது. மாநில அரசுகளின் கடும் கெடுபிடியால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணியர் ஏமாற்றம் அடைந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து, மார்ச் இறுதியிலிருந்து ரத்து செய்யப்பட்டது. இதனால், விமான நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின.

புறப்பட்டது

இதையடுத்து, சில பாதுகாப்பு நிபந்தனைகளுடன், உள்நாட்டு விமான போக்குவரத்தை மட்டும் மீண்டும் துவக்க, விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது. இதன்படி, நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து, நேற்று விமானங்கள் இயக்கப்பட்டன. முதல் விமானம், டில்லியிலிருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் புனேக்கு, அதிகாலை, 4:45க்கு புறப்பட்டது.விமான போக்குவரத்து அதிகம் உள்ள விமான நிலையங்களை உடைய மாநிலங்களான, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகியவை, விமானங்களை முழு அளவில் இயக்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.

மஹாரஷ்டிரா, தமிழகம் மாநிலங்களில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், விமானங்களை அதிகம் இயக்குவது, வைரஸ் பரவலை அதிகரித்து விடும் என, அந்த மாநில அரசுகள் சார்பில், மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதேபோல், மேற்கு வங்கத்தை சமீபத்தில் புயல் தாக்கியதால், கோல்கட்டாவுக்கு விமானங்களை இயக்க வேண்டாம் என, மேற்கு வங்க அரசும் வலியுறுத்தியது. இதையடுத்து, மும்பை, சென்னை, உள்ளிட்ட நகரங்களுக்கு மிக குறைந்த அளவிலேயே விமானங்கள் இயக்கப்பட்டன.மேலும், பல மாநில அரசுகள், விமான பயணியருக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்தன. விமானங்களில் வந்திறங்கும் பயணியர் அனைவரையும் பரிசோதிக்கப் போவதாகவும், 14 நாட்கள் தனிமைப் படுத்தப் போவதாகவும் தெரிவித்தன.

கட்டுப்பாடு

தமிழகம், கர்நாடகா, கேரளா, பீஹார், பஞ்சாப், அசாம், ஆந்திரா ஆகிய மாநில அரசுகள், விமான பயணியருக்கு தனித் தனி விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தன. இதையடுத்து, விமானங்களில் பயணிக்க திட்டமிட்டிருந்த பலரும், தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். இதன் காரணமாக, விமான போக்குவரத்து துவங்கிய முதல் நாளிலேயே, ஏராளமான விமானங்கள் ரத்து
செய்யப்பட்டன.டில்லி விமான நிலையத்தில் மட்டும், 82 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நாடுமுழுதும் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.கோல்கட்டாவிலிருந்து எந்த விமானமும் இயக்கப்படவில்லை. இங்கிருந்து, வரும், 28ம் தேதியிலிருந்து, தினமும், 20 விமானங்களை மட்டும் இயக்க, மாநில அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளதாவது:சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதால், துவக்கத்தில், ஒரு நாளைக்கு, 25 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும். அதேநேரத்தில், சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. தமிழகத்தின் மற்ற நகரங்களில் வழக்கம் போல் விமான போக்குவரத்து இருக்கும்.ஆந்திர மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, அந்த மாநிலத்துக்கும் மிக குறைந்த விமானங்களே இயக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

மாநில அரசுகள் விதித்துள்ள கட்டுப்பாடு என்ன?

மஹாராஷ்டிரா: மும்பை விமான நிலையத்துக்கு வரும் பயணியர், கொரோனா அறிகுறி இல்லாவிட்டாலும், 14 நாட்கள், வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்த வேண்டும்.

தமிழகம்: கொரோனா அறிகுறி இல்லாதவர்கள், வீடு அல்லது ஓட்டல்களில், 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.

டில்லி: வைரஸ் அறிகுறி இல்லாதவர்கள், 14 நாட்கள் வீட்டில், தங்களை தனிமைப்படுத்த வேண்டும். இந்த, 14 நாட்களில் அறிகுறி தென்பட்டால், உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொரோனா அறிகுறி உள்ளவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.

கர்நாடகா: தமிழகம், குஜராத், டில்லி, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் பயணியர், மாநில அரசால் நடத்தப்படும் முகாம்களில், ஒரு வாரம் தங்கியிருக்க வேண்டும். அடுத்த ஒரு வாரம், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பஞ்சாப்: வேறு மாநிலங்களில் இருந்து, விமானம், பஸ், ரயில் மூலம் பஞ்சாபுக்கு வருவோர், வீடுகளில், 14 நாட்கள், தங்களை தனிமைப்படுத்த வேண்டும்.

கேரளா: மாநில அரசின் இணையதளம் வாயிலாக முறையான அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே, விமான நிலையங்களில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர். அனுமதிச் சீட்டு இல்லாமல் வருவோர். 14 நாட்கள், தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுவர்.

உத்தர பிரதேசம்: அனைவரும் வீடுகளில், 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். ஆறு நாட்களுக்குப் பின், அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும். வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டால், அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதிக்கப்படுவர். வைரஸ் பாதிப்பு இருந்தால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்.

மத்திய பிரதேசம்: அனைத்து பயணியருக்கும் கட்டாயம் பரிசோதனை நடத்தப்படும். இதில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படா விட்டாலும், அவர்கள், வீடுகளில், 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE