https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2545987.jpg

கொரோனா வுக்கு தடுப்பூசி தயாரிக்க அனுமதி: மத்திய அரசு படுவேகம்

மும்பை: 'கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்க, நம் நாட்டு மருந்து உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், உடனடியாக அனுமதி அளிக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன' என, மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலர், ரேணு ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

மத்திய உயிரி தொழில்நுட்பத் துறைச் செயலர், ரேணு ஸ்வரூப் கூறியதாவது:கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க, பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. தற்போதைய நிலையில், எட்டு வகையான தடுப்பூசிகள், பல்வேறு கட்ட பரிசோதனை நிலையில் உள்ளன.

பேச்சு

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்றவை, தடுப்பூசி தயாரிப்பதற்காக, மருந்து நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகின்றன. கோடிக்கணக்கான பணத்தையும் செலவிட்டு வருகின்றன.கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும் முனைப்பில், பல்வேறு இந்திய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில், மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, 'செரம்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், பிரிட்டன் மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

தயார்

இவ்வாறு பல இந்திய நிறுவனங்கள், தடுப்பூசியை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் பெறும் முயற்சியில் உள்ளன.இந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைத்து, அந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதை வரவேற்க, உயிரி தொழில்நுட்பத் துறை தயாராக உள்ளது. மருத்துவப் பரிசோதனை வசதிகள் மற்றும் நிர்வாக ஒப்புதல்கள் அளிப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

உற்பத்தி தீவிரம்

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:நம் நாட்டில், நாளொன்றுக்கு, தலா, மூன்று லட்சம், என் - 95 முகக் கவசம் மற்றும் முழு உடல் பாதுகாப்பு உடைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் தரம் குறித்து சந்தேகம் எழுப்பி, சில செய்திகள் வெளியாயின. அனைத்து வகை தர பரிசோதனைகளும், தீவிரமாக செயல்படுத்தப்படுகின்றன. அதனால், இவற்றின் தரம் குறித்த சந்தேகம் தேவையில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE