தம்மம்பட்டி டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
by DINசேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாதென்று பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் உள்ள ஒரே டாஸ்மாக் கடையானது, வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் அமைந்துள்ளது. இக்கடைக்கு பார் எதுவும் இல்லை. அதனால், வாரச்சந்தை நடைபெறும் பகுதி முழுவதும், மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்தி வந்தனர். இதனால், அப்பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் நாள்தோறும் இன்னலுக்கு ஆளாகினர்.
மேலும் இந்த டாஸ்மாக்கடை வழியேதான் வசந்த் நகர், குட்டிக்கரடு, செங்காடு, முள்ளுக்குறிச்சி, மாவாறு, புதுமாவாறு, பெரிய கோம்பை உள்ளிட்ட ஊர்களின் மக்களும் செல்லவேண்டியுள்ளது. இதனால் டாஸ்மாக் கடையால் மது அருந்தியவர்கள் செய்யும் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகினர்.
அதனால், பல மாதங்களாக இக்கடையை வேறுபகுதிக்கு மாற்ற இப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் இக்கடை மூடப்பட்டிருந்தது. அதன்பின்னர், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட பின்னரும், இந்தக் கடை மட்டும் பொதுமக்கள் தொடர் எதிர்ப்பால் திறக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல், அக்கடைக்கு மதுபானங்களை இறக்க சரக்கு லாரி வந்தது. தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அக்கடைக்கு சரக்குகள் இறக்கவும், கடையைத் திறக்கவும் எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த தம்மம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் பாஸ்கரபாபு தலைமையிலான போலீஸார், அங்குவந்து பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் தம்மம்பட்டி காவல்ஆய்வாளர் பாஸ்கரபாபு, இக்கடை பிரச்சினை அடுத்த 15 நாள்களுக்குள் தீர்க்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன்பின்னர், அக்கடை திறக்கப்பட்டு மதுபானங்கள் மாலையில் விற்பனை தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது.