
ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லி: 50 படுக்கைகள் அல்லது அதற்கு மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனைகள் அனைத்தும், தங்களின் 20 சதவிகித படுக்கை வசதிகளை கோவிட் பாதித்த நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று காணொலி மூலமாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது: ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால், இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. பாதிப்பு அதிகரித்தாலும் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.பெரும்பாலான வழக்குகளில் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. அவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 3,314 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று வரை 13,418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,540 பேர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 6,617 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 261 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 50 படுக்கைகள் அல்லது அதற்கு மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட 117 தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை இருப்பினும், விதிவிலக்காக மேலும் 25 சதவிகிதம் படுக்கைகளை கொரோனா அவசர காலம் கருதி அந்தந்த மருத்துவமனைகளில் அமைத்துக் கொள்ளலாம் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகள் கண்டறியப்படும்போது, இது இவ்வளவு தீவிரமாக மாறும் என பலரும் எதிர்பார்க்கவில்லை. இப்போது இந்த நிலையை அரசும், தனியார் மருத்துவமனைகளும் சேர்ந்தே சமாளிக்க வேண்டியுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.