http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__912731349468232.jpg

கொரோனாவால் கடுமையான பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் இடம்பிடித்த இந்தியா... பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.38 லட்சத்தை தாண்டியது

டெல்லி: கொரோனாவால் கடுமையான பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.38 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது.

இந்த இக்கட்டான நிலையில்  இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டதாவது: இந்தியாவில் மொத்தம் 1,38,845 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,000-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,721 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானை பின்னுக்குத் தள்ளி, முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 10-வது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் 55 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் 23.03 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகளில் விவரம்:..

அமெரிக்கா - 1,686,436 பேர் பாதிப்பு
பிரேசில்- 365,213 பேர் பாதிப்பு
ரஷியா- 344,481 பேர் பாதிப்பு
ஸ்பெயின்- 282,852 பேர் பாதிப்பு
பிரிட்டன்- 259,559 பேர் பாதிப்பு
இத்தாலி- 229,858 பேர் பாதிப்பு
பிரான்ஸ்- 182,584 பேர் பாதிப்பு
ஜெர்மனி-180,328 பேர் பாதிப்பு
துருக்கி-156,827 பேர் பாதிப்பு
இந்தியா-138,845. பேர் பாதிப்பு

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஈரானை பின்னுக்கு தள்ளி இந்தியா 10-வது இடத்தில வந்துள்ளது. மேலும் இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை கொண்டு வருவது மக்கள் மனதில் குழப்பத்தில் ஏற்படுத்தி வருகிறது.