தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்பட வேண்டும்: கி.துரைராசசிங்கம்

by

தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இத்துறைக்கென நியமிக்கப்படுவோர் துறைசார் நிபுணர்களாக இருக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

தொல்லியல் துறை தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கையாளுவதற்கான ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.

இதன் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இவ்விடயம் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் இவ்விடயங்கள் தொடர்பில் மிகவும் அலட்சியமாக, சட்டங்களை மதிக்காத வகையில் அல்லது அசட்டைத் துணிவோடு, குறிப்பிடப்பட்ட இக்காலத்தில் செய்யப்பட முடியாத பல செயல்களைத் தொடர்ந்து செய்தவண்ணமே இருக்கின்றார்.

தொல்லியல் இடங்கள் தொடர்பான விடயங்கள், தொன்மங்களைக் கண்டறிதல் என்பவற்றுக்கு அப்பால் இலங்கை முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வருகின்ற வஞ்சகத் தனமான ஒரு நடைமுறையாகவே இலங்கையில் தொடர்ச்சியாகக் கையாளப்பட்டுக் கொண்டு வருகின்றது.

இந்த நாட்டின் உண்மையான பூர்வீகம் தொல்லியல் ஆதாரங்களோடு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதிலே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஆனால் இலங்கையின் தொல்லியல் ஆய்வு நிறுவனமானது இந்த வகையில் இயங்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டே கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பு ஆக்க செயற்பாட்டில் நாங்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானமாயிருந்தோம்.

அரசியலமைப்பு வரைபின் உருவாக்கத்தில் அடுத்த அங்கமாக வனத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, தொல்லியல்துறை என்பன தொடர்பான சட்டங்கள் மீளாயப்பட்டு இவை தொடர்பில் மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகள் செய்யப்படுவதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம்.

வரைபின் இறுதி அங்கமாக இவ்விடயம் கையாளப்பட இருந்த வேளையிலே தான் ஒக்டோபர் 26 அரசியல் உறுதியின்மை நிகழ்வு ஏற்பட்டது. முழுக்க முழுக்க புதிய அரசியலமைப்பை வரவிடாது தடுக்கும் ஒரு செயலாக நாம் அதனைப் பார்த்தோம்.

இச்செயற்பாட்டின் தொடர்ச்சியான நிகழ்வுகளில் ஒன்றாகவே இந்த தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணி அமைகின்றது.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மொட்டுக் கட்சியிலும் அதற்கு ஆதரவு வழங்கக் கூடிய கட்சிகளிலும் வேட்பாளர்களாக நிற்பவர்களும் அவற்றின் தலைவர்களும் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.