http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__591869533061982.jpg

மதுரை திருப்பரங்குன்றம் கோவில் யானைக்கு கொலை வெறி ஏன்?.. பரபரப்பான தகவல்

மதுரை: திருப்பரங்குன்றம் யானைக்கு மதம் பிடித்தது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி பாகன்களை மாற்றியதால் ஏற்பட்ட மொழி குழப்பமே யானையின் கோபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. யானைகள் அன்புக்கு அடிமையான காட்டு விலங்கு என்பதால் அதனை அடித்து துன்புறுத்த கூடாது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளது. பாகன்களின் கட்டளைக்கு அடிபணிவது யானைகளின் இயல்பு. மதம் பிடித்து விட்டால் அதன் ஆக்ரோஷத்தை யாராலும் தடுக்க முடியாது இது ஆண் யானைக்கு மட்டுமே பொருந்தும் சமயத்தில் பெண் யானைகளும் கோபத்தின் உச்சிக்கு செல்வது வழக்கம்.

அதன் வெளிப்பாடே திருப்பரங்குன்றம் தெய்வானை யானையின் கொலைவெறி தாக்குதல் அதற்கு கோபம் வருவது புதிதல்ல பாகன்களை புரட்டியெடுத்த சம்பவம் இதற்கு முன்பும் நடந்துள்ளது. யானை தெய்வானையின் தாக்குதலில் துணை பாகன் காளீஸ்வரன் உயிரிழந்ததை அடுத்து மயக்க ஊசி செலுத்தி சாந்தப்படுத்தப்பட்டது. தற்போது இயல்பு நிலைக்கு யானை வந்துவிட்டாலும் அதன் கோபம் முற்றிலும் தணிந்து விட்டதா என்பது சந்தேகமே. யானையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த யானை 7 வயது குட்டியாக அசாம் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.

அதனை பழக்கப்படுத்துவதில் இதுவரை 3 முறை பாகன்க்கள் மாற்றப்பட்டுள்ளனர். எனவே மொழியை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பம், துன்புறுத்தல் போன்றவையே யானையின் கோபத்திற்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி சமயபுரம் கோவில் யானை மசினியும் பாகனை கொன்ற சம்பவம் அரங்கேறியது. அந்த யானையை தஞ்சை கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சில மாதங்கள் வைத்து பராமரிக்கும் நிலை ஏற்பட்டது. தமிழக கோவில்களில் சுமார் 30 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் முதுமலையில் நடைபெறும் முகாமில் யானைகள் பங்கேற்கின்றன.

யானைகளின் உடல் நலத்திற்காக மன வலிமைக்காகவும் இது போன்ற முகாம்கள் நடத்தப்பட்டாலும் பாகன்கள் காட்டும் அன்பே காட்டு விலங்கான யானையை அடிபணிய செய்யும். இதனை உணர தவறினால் ஆபத்துக்களும் தொடர்கதையாகி விடும்.