http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__233165919780732.jpg

டெல்லியில் இன்று இயக்கப்பட இருந்து 82 விமானங்களின் சேவை ரத்து: நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் கடும் அதிருப்தி

டெல்லி: டெல்லியில் இன்று இயக்கப்பட இருந்த 82 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால் காத்திருந்த பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்தியாவில் கடந்த 60 நாட்களாக மேலாக இருந்துகொண்டு இருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கிற்கு பின்னர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சில தளர்வுகளின்படி, உள்நாட்டு விமானச் சேவை இன்று தொடங்கியுள்ளது. இந்தச் சேவைக்கு பல்வேறு மாநிலங்களும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. தமிழக அரசு 25 உள்நாட்டு விமானங்களை மட்டுமே தமிழகத்திற்கு இயக்க அனுமதி அளித்துள்ள நிலையில் மும்பைக்கு தினந்தோறும் 50 விமானங்களை மட்டும் இயக்க அம்மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று இயக்கப்பட இருந்த 82 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு மாநிலங்களில் அனுமதி அளிக்கவில்லை என்பதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையத்தின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் அம்பன் புயல் பாதிப்பால், வருகின்ற மே 28-ம் தேதி முதல் விமான நிலையச் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பீகார், பஞ்சாப், அசாம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலத்திற்கு வரும் விமானப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் இன்று டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் டெல்லிக்கு வரவிருந்த 82 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல் கடைசி சில நிமிடங்களுக்கு முன்னரே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால் தங்களின் முக்கிய நிகழ்ச்சிகளை தவறவிட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.