ஒருமுறை, என் மனைவியை புரு என அழைத்து விட்டேன்: இசைக்கலைஞர் புருஷோத்தமன் மறைவுக்கு இளையராஜா வேதனை (விடியோ)
by DINஇளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி முதல் அவருடன் இணைந்து பணியாற்றிய இசைக்கலைஞர் புருஷோத்தமன் சமீபத்தில் காலமானார். அவருக்கு வயது 70.
இரத்தப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த புருஷோத்தமன், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இளையராஜாவின் இசைக்குழுவில் டிரம்மராகவும் இசை மேற்பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
புருஷோத்தமனின் மறைவுக்கு இளையராஜா விடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என்னுடன் வாழ்நாளிலே என் அருகிலே அதிக நாள் இருந்து, மற்றவர்கள் எல்லோரையும் விட, எங்களுடைய குடும்பத்தாருடன் இருந்ததை விட நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த நேரம் தான் அதிகம். நேரம் என்றால் நேரம் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு இசையிலேயே கழிந்த நேரம் அத்தனையும் நாங்கள் ஒன்றாக இருந்ததுதான்.
எந்த நேரம் அழைத்தாலும் அந்த நேரம் என் அருகில் அமர்ந்து அல்லது அவர் அருகிலே நான் அமர்ந்து இசையமைக்கின்ற நிகழ்வுகள் ஏராளமாக நடந்துள்ளன. என் வாழ்க்கையில் என் குடும்பத்தாருடன் கூட அவ்வளவு நேரம் இருந்தது கிடையாது. வீட்டில் ஒருமுறை என் மனைவியை அவர் பெயரைச் சொல்லி அழைப்பதற்குப் பதிலாக புரு என்று சொல்லி அழைத்துவிட்டேன். அவ்வளவு தூரம் நெருக்கமாக இருந்த புருஷோத்தமன் காலமானது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இந்த நிகழ்வை இவ்வளவு சீக்கிரம் நான் எதிர்பார்க்கவில்லை. இறைவன் விரைவாகவே அவரை அழைத்துக்கொண்டுவிட்டான். சகோதரர் சந்திரசேகர் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.