
தனிநபர் பாதுகாப்பு கவசத்தின் தரம் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பின்னரே கொள்முதல் செய்யப்படும்: மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
டெல்லி : தனிநபர் பாதுகாப்பு கவசத்தின் தரம் பற்றி ஊடகத்தில் வெளியானது குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6,977 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 154 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 4021 பேர் உயிரிழந்த நிலையில், 57,721 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதித்தோருக்கு சுவாச சிகிச்சை அளிக்க பயன்படும், 'வென்டிலேட்டர்' கருவிகள், சுகாதார துறையினருக்கான முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள், தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.ஆனால், இந்த பொருட்களை தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள், வெளிநாடுகளில் இருந்து தான், இறக்குமதி செய்யப்படுகின்றன. தனிநபர் பாதுகாப்பு கவசத்தின் தரம் பற்றி ஊடகத்தில் வெளியானது குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. தனிநபர் பாதுகாப்பு கவசத்தின் தரம் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பின்னரே கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் குறைபாடு இருப்பது தெரியவந்தால் உரிய நிறுவனத்திடம் இருந்து பாதுகாப்பு கவசம் வாங்குவது நிறுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
தரத்தை முழுமையாக சோதனை செய்த பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமாக தனிநபர் பாதுகாப்பு கவசம், N95 முகக்கவசம் உற்பத்தி செய்யப்படுவதாக கூறிய மத்திய அரசு, மாநில, மத்திய அரசு நிறுவனங்களுக்கு இதுவரை 111.08 லட்சம் N95 முக கவசங்கள் வழங்கப்பட்டதையும் தெரிவித்துள்ளது.