https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/taufeeq1xx.jpg

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

by

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தவீக் உமருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்காக 44 டெஸ்டுகள், 22 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 2963 ரன்களும் ஒருநாள் ஆட்டங்களில் 504 ரன்களும் எடுத்துள்ளார். கடைசியாக, 2014-ல் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடினார்.

இந்நிலையில் தவீக் உமருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

உடல்நலக்குறைவுடன் இருந்த எனக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாசிடிவ் என முடிவு வந்துள்ளது. இத்தனைக்கும் தீவிரமான கரோனா அறிகுறிகள் என்னிடம் தென்படவில்லை என்றார்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நான்காவது கிரிக்கெட் வீரர், தவீக் உமர். ஏற்கெனவே மஜித் ஹக் (ஸ்காட்லாந்து), சபர் சர்பராஸ் (பாகிஸ்தான்), சோலோ குவேனி (தென் ஆப்பிரிக்கா) ஆகிய கிரிக்கெட் வீரர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 3 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.