https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/Airport_Twitter_.jpg

விமான சேவை தொடங்கிய முதல் நாளிலேயே பல விமானங்கள் ரத்து

by

இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்து திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது. இருப்பினும், போதிய பயணிகள் இல்லாததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பேருந்து, ரயில், விமான சேவை உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு பயணிகள் விமான சேவையை மே 25-ஆம் தேதி தொடங்குவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தாா். அதைத் தொடா்ந்து, போக்குவரத்து தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருந்தது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும், பயணிகளுக்கு தனியாக சுகாதார நெறிமுறைகளை வெளியிட்டது.

இந்நிலையில், உள்நாட்டு பயணிகள் விமான சேவை இன்று தொடங்கியது. முதல் விமானம் இன்று காலை 4.45 மணியளவில் தில்லியில் இருந்து புணேவுக்குப் புறப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் இன்று ஏராளமான பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

உதாரணமாக தில்லி விமான நிலையத்தில் மட்டும் இன்று புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய 82 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுபோல போதிய பயணிகள் இல்லாததால் ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அதில் பயணிக்க விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள், தங்கள் மாநிலத்தில் விமானச் சேவையைத் தொடங்க இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.