![https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/seemaraja11.jpg https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/seemaraja11.jpg](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/seemaraja11.jpg)
சிங்கம்பட்டி ஜமீன்தார் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்
by DINசிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியின் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் பொன்ராம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31 ஆவது பட்டம் பெற்ற ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி (89) நேற்று காலமானார்.
தென் தமிழகத்தில் மிகவும் பழமையானது சிங்கம்பட்டி ஜமீன். கி.பி.1100 ஆம் ஆண்டில் உருவான இந்த சமஸ்தானத்தின் 31 ஆவது பட்டத்தை தனது மூன்றரை வயதில் பெற்றவர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. 29.09.1931இல் பிறந்த இவர் இந்தியாவின் கடைசி முடிசூட்ட மன்னர் என்ற பெருமை பெற்றவர். மேலும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள புகழ்பெற்ற கரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் உள்பட 8 கோயில்களின் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் சொரிமுத்து அய்யனார் கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை விழாவில் ராஜ உடையில் மக்களுக்குக் காட்சியளித்து வந்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கம்பட்டியில் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி, நேற்று இரவு 9.30 மணியளவில் காலமானார். இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
சிங்கம்பட்டி ராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என்கிற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார். இதையடுத்து முருகதாஸ் தீர்த்தபதியின் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா. அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் பொன்ராம், ட்விட்டரில் தெரிவித்ததாவது:
ஜமீன் ராஜா மட்டும் அல்ல, தமிழ் இலக்கியவாதி, பண்பானவர். இவர் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் சிங்கம்பட்டி ஊர் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.
![https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/5/25/seemaraja1.jpg https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/5/25/seemaraja1.jpg](https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/5/25/seemaraja1.jpg)
![https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/24/original/Singampatti_Zamindar.jpeg https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/24/original/Singampatti_Zamindar.jpeg](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/24/original/Singampatti_Zamindar.jpeg)
![https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/Singampatti_Zamindar.jpg https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/Singampatti_Zamindar.jpg](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/Singampatti_Zamindar.jpg)