ஊரடங்குச் சட்டம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெறிச்சோடிய வீதிகள்
by Varunan, Mayuriகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் இன்று பொது மக்களின் நடமாட்டம் இன்றி பாதைகள் வெறிச்சோடி காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பாக கல்முனை, சவளக்கடை, மத்தியமுகாம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் முஸ்லிம் மக்கள் அரசாங்க அறிவுறுத்தல்களுக்கு அமைய வீடுகளில் இருந்து நோன்பு பெருநாளை கொண்டாடியுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் காரணமாக இன்று உணவகங்கள், புடவைக்கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கவில்லை.
இன்றைய தினம் இம்மாவட்டத்தின் பெரியநீலாவணை, காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம், அக்கரைப்பற்று உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸார் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.