ஹாக்கி வீரர் பல்பீர் சிங் சீனியர் மறைவு: பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்
by DINஹாக்கி முன்னாள் வீரர் பல்பீர் சிங் சீனியரின் மரணத்துக்கு பிரதமர் மோடியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்கள்.
உடல்நலக் குறைவால் கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார் 96 வயது பல்பீர் சிங் சீனியர். கடந்த மே 8 அன்று மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். சில நாள்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு மேலும் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் பல்பீர் சிங்கின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இத்தகவலை அவருடைய பேரன் கபிர் தெரிவித்துள்ளார்.
பல்பீர் சிங் சீனியரின் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
பத்மஸ்ரீ பல்பீர் சிங் சீனியர், தன்னுடைய சாதனைகளுக்காக நினைவுகூரப்படுவார். இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளையும் பெருமைகளையும் அளித்தவர். அற்புதமான ஹாக்கி வீரராக மட்டுமல்லாமல் நல்ல ஆலோசகராகவும் இருந்துள்ளார். அவருடைய மரணம் எனக்கு வேதனையைத் தருகிறது. அவருடைய குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பல்பீர் சிங் சீனியரின் மரணத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
பல்பீர் சிங் சீனியரின் மறைவைக் கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். ஒலிம்பிக்ஸ் போட்டியில் மூன்று முறை தங்கம் வென்றவர், பத்மஸ்ரீ விருது பெற்றவர், இந்தியாவின் மகத்தான விளையாட்டு வீரர்... என அவருடைய சாதனைகள் வருங்காலத் தலைமுறைக்கு எப்போதும் ஊக்கமாக இருக்கும். அவருடைய குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்திய ஹாக்கி அணி 1948, 1952, 1956 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார் பல்பீர் சிங் சீனியர். 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்ஸில் இவர் தலைமையில்தான் இந்திய அணி தங்கம் வென்றது. ஒலிம்பிக்ஸ் ஹாக்கி இறுதிப் போட்டியில் அதிக கோலடித்தவர் என்கிற சாதனை பல்பீர் வசமே உள்ளது. 1952-ல் நெதர்லாந்து அணிக்கு எதிராக இறுதிச்சுற்றில் இந்திய அணியின் 6-1 வெற்றியில் 5 கோல்கள் அடித்து அசத்தினார் பல்பீர். 1975 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றபோது பல்பீர் தலைமைப் பயிற்சியாளராகவும் மேலாளராகவும் இருந்தார். 1957-ல் பத்மஸ்ரீ விருது பல்பீர் சிங்குக்கு அளிக்கப்பட்டது.
பல்பீர் சிங் சீனியரின் மறைவுக்கு விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.