தில்லி தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த கேரள செவிலியர் கரோனாவுக்கு பலி
by ENSபுது தில்லி: மேற்கு தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் கரோனா பாதித்து உயிரிழந்தார்.
மேற்கு தில்லியின் கீர்த்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேரளத்தைச் சேர்ந்த அந்த செவிலியர் பணியாற்றி வந்துள்ளார்.
மருத்துவமனை ஊழியர் ஒருவர் இது பற்றி கூறுகையில், கடந்த சில நாட்களாக செவிலியர் மருத்துவமனைக்கு பணிக்கு வரவில்லை. அப்போது மருத்துவமனை சார்பில் விசாரித்த போது, அவர் கரோனா பாதித்து உயிரிழந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது என்றார்.
தனியார் மருத்துவமனையின் வாயிலிலேயே அனைத்து நோயாளிகளும் உடல் வெப்ப சோதனை செய்யப்பட்டு, காய்ச்சல் இல்லாதவர்கள் மட்டுமே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
இது பற்றி ஐக்கிய செவிலியர் சங்கம் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், தில்லியின் ரஜௌரி கார்டன் பகுதியில் தங்கியிருந்த செவிலியர் ரமேஷ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் கரோனா பாதித்து தில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார். அவரது ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறோம். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம் என்று முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.