இருமல் சப்தத்தைக் கொண்டு கரோனாவைக் கண்டறிய முடியுமா?
by DINபுது தில்லி: இருமல் மற்றும் பேசும் போது குரல் பதிவைக் கொண்டு கரோனா நோயாளிகளை அடையாளம் காண முடியுமா? என்றால் முடியும் என்கிறார்கள் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் (ஐஐஎஸ்சி) ஆராய்ச்சியாளர்கள்.
இருமல் சப்தத்தைக் கொண்டு கரோனாவை கண்டறியும் சோதனை முயற்சியில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நிச்சயம் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மிக விரைவாகவும் குறைந்த செலவிலும் கரோனா நோயாளிகளைக் கண்டறிய முடியும் என்கிறார்கள்.
மேலும் அவர்கள் கூறுகையில், இந்த ஆய்வுக்காக ஏராளமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருமுவதற்கும், கரோனா பாதித்தவர்களின் இருமல் சப்தத்துக்கும் பல வேறுபாடுகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இந்த திட்டத்துக்கு கோஸ்வரா என்று பெயரிடப்பட்டுள்ளது. இருமல் மற்றும் குரல் பதிவை அடிப்படையாக வைத்து இந்த சோதனை செய்யப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தை இணையம் அல்லது செல்போன் செயலிகளாக உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இருமல் மற்றும் குரல் பதிவை அந்த செயலியில் பதிவு செய்தால், அவர்களுக்கு கரோனா இருக்கிறதா, இல்லையா என்பதை அதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மார்ச் மாத இறுதியில் இருந்து இந்த திட்டத்தில் பணியாற்றி வரும் 7 பேர் கொண்ட குழுவுடன் பெங்களூரு ஐஐஎஸ்சி-யின் எலக்ட்ரிக் என்ஜினியரிங் உதவிப் பேராசிரியர் ஸ்ரீராம் கணபதியும் இணைந்துள்ளார்.
இவர்கள் தற்போது கரோனா பாதித்த நோயாளிகளின் இருமல் மற்றும் குரல் பதிவையும், வேறு நோயால் பாதித்து இருமிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் குரல் பதிவையும் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில், கரோனா நோயாளிகளின் இருமல் சப்தத்துக்கும், சாதாரண நோயாளிகளின் இருமல் சப்தத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாதிரிகள் மிகக் குறைவு என்பதால், அதற்குள் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது என்பதால், அதிகளவில் மாதிரிகளைச் சேகரிக்க மருத்துவமனைகளின் உதவியை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஐசிஎம்ஆர்-ன் ஒப்புதலைப் பெற விண்ணப்பித்துள்ளோம் என்று ஸ்ரீராம் கணபதி கூறியுள்ளார்.