http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__166210353374482.jpg

இந்தியாவின் கடைசியாக முடி சூட்டப்பட்ட அரசர் என்ற பெருமை கொண்ட சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி நேற்று காலமானார்

திருநெல்வேலி: இந்தியாவின் கடைசியாக பட்டம் கட்டிய அரசர் என்ற பெருமை கொண்ட சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி(92) நேற்று காலமானார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிங்கம்பட்டி ஜமீன் என்ற ஒரு கிராமத்தில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பல கிராமங்களை உள்ளடக்கி 1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்து வந்துள்ளது.

இந்த சிங்கம்பட்டி ஜமீன் கிராமத்துக்கு 900 ஆண்டு வரலாறு சொல்லப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தக்காரர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சிங்கம்பட்டி பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.

ஜமீன் சிங்கம்பட்டியில், சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமையப்பெற்றுள்ளது. சிங்கம்பட்டி ஜமீனில் 1,000 குதிரைகள் பராமரிக்கப்பட்டதாகவும், 5 தந்தப் பல்லக்குகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஜமீன் சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. அரண்மனை அருங்காட்சியகத்தில் திவான் பகதூர் பயன்படுத்தி வந்த உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் பல வரலாறுகளை சுமந்த சிங்கம்பட்டியின் 31-வது ஜமீன் பட்டம் பெற்றவர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவர்தான் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மூன்றரை வயதில் முடி சூட்டப்பட்டது. இந்நிலையில் வயதுமூப்பு காரணமாக 92 வயதான சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி நேற்று காலமானார். இந்த நிலையில் அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.