![http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__847698390483857.jpg http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__847698390483857.jpg](http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__847698390483857.jpg)
மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஹாக்கி ஒலிம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் மொஹாலியில் மருத்துவமனையில் காலமானார்
மொஹாலி: ஹாக்கி ஒலிம்பியன் பல்பீர் சிங் (வயது 96) எஸ்.ஆர் பஞ்சாபில் மொஹாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவர் கடந்த 12-ம் தேதி மாரடைப்பு காரணமாக மொஹலியில் உள்ள மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் டோசன்ஜ், 95 வயதில் இன்று காலமானார். 1948, 1952 மற்றும் 1956 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங். 1956ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நெதர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. கேப்டனான பல்பீர் சிங், இறுதி ஆட்டத்தில் 5 கோல்கள் அடித்து சாதனை புரிந்தார். ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் அதிக கோல் அடித்த இச்சாதனை இன்றளவும் முறியடிக்கப்படவில்லை. இதனாலேய இவர் பல்பீர் சிங் சீனியர் என சக வீரர்களால் அழைக்கப்பட்டார். இவர் மூச்சுத்திணறல், காய்ச்சல் காரணமாக கடந்த மே 8ம் தேதி மொஹாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்த உறைவு ஏற்பட்ட பின்னர் மே 18 முதல் அரை கோமா நிலையில் இருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் இவர் காலமானதாக மருத்துவமனை இயக்குனர் அபிஜித் சிங் தெரிவித்தார். சிகிச்சையின் போது அவருக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த மே 18 முதல் அவர் பாதி கோமாவில் இருந்தார். முதலில் நிமோனியா காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மூளையில் ரத்தக் கட்டு ஏற்பட்டது. அவருக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தேர்வு செய்த 16 ஜாம்பவான் வீரர்களில் பல்பீர் சிங் மட்டுமே ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. 1957இல் அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் அளித்து இந்திய அரசு கௌரவித்தது. பின்னர் 1975இல் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக அவர் இருந்த போது தான் இந்தியா தன் முதல் ஹாக்கி உலகக்கோப்பையை வென்றது. அதன் பின் இப்போது வரை உலகக்கோப்பை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்பீர் சிங்கின் மறைவுக்கு ஹாக்கி வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுக்களை சேர்ந்த வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.