http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__271373927593232.jpg

சென்னையில் வேகமாக பரவும் கொரோனா தொற்று: 2000-யை நெருங்கும் ராயபுரம் மண்டலம்

சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,981 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி, 11,141ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஒரு வாரமாக சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு 500க்கு அதிகமாக உள்ளது. சென்னையில் பெண் உள்பட 6 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ராயபுரம் மண்டலம் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு, ஆயிரம் எண்ணிக்கையை கடந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 1,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கோடம்பாக்கம் 1,460, திரு.வி.க.நகர் 1,188, தேனாம்பேட்டை 1,118 மற்றும் தண்டையார்பேட்டை 1,044 ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயது முதியவர் உயிரிழந்தார். கே.எம்.சி.யில் வுருகம்பாக்கத்தைச் சேர்ந்த 54 வயது முதியவரும், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 65 முதியவரும் உயிரிழந்துள்ளனர்.