https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2545492.jpg

தமிழகத்தில் விமான போக்குவரத்து துவங்கியது

8+5

சென்னை : தமிழகத்தில், விமானப் போக்குவரத்து இன்று துவக்கப்படுகிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கடுமையான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதங்களாக, பயணியர் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று முதல், உள்நாட்டு விமான சேவைகளை மட்டும் குறைந்த அளவில் இயக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில், கொரோனா நோய் பரவல், தினமும் அதிகரித்தபடி உள்ளது. எனவே, 'வரும், 31 வரை, ரயில் மற்றும் விமான சேவையை, தமிழகத்தில் அனுமதிக்க வேண்டாம்' என, பிரதமரிடம், முதல்வர் இ.பி.எஸ்., வலியுறுத்தினார்.


ஆனால், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், நாடு முழுதும், விமான சேவைகளை இயக்க முடிவு செய்தது. இதற்காக, தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
இது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில், தமிழக அரசின் உயர் அதிகாரிகள், சுகாதாரத் துறையினர், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டம் தொடர்பாகவோ, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தோ, அரசு தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் விமான சேவையை துவக்க, தமிழக அரசு கடுமையான நிபந்தனைகளுடன், அனுமதி அளித்துள்ள விபரம் தெரிய வந்துள்ளது.

அந்த நிபந்தனைகள் விபரம்:

* வெளி மாநிலங்களிலிருந்து, விமானங்களில் தமிழகம் வரும் பயணியர் அனைவரும், தமிழக அரசின், 'இ- - பாஸ்' பெற, tnepass.tnega.org என்ற, இணையதளத்தில் பதிவு செய்து, முறையாக அனுமதி பெற வேண்டும்.

* அனுமதி பெற, 'நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இல்லை; நோய் அறிகுறி இல்லை' என்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும்.

* 'தவறான தகவலை தெரிவித்திருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' என, உறுதி அளிக்க வேண்டும்.

* இணையதளத்தில் பதிவு செய்யும் மொபைல் எண் மற்றும் 'இ - -மெயில்' வழியாக, அனுமதி சீட்டு அனுப்பப்படும். அந்த அனுமதி சீட்டை, அவர்கள் பயணம் செய்யும், ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் காண்பித்த பிறகே, விமானத்தில் ஏறுவதற்கான, 'போர்டிங் பாஸ்' வழங்கப்படும்.

* தமிழகத்தில் வந்து இறங்கியதும், விமான நிலையத்தில், மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்
.

* ஒவ்வொரு பயணியரும், கண்டிப்பாக, 14 நாட்கள், தங்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட வேண்டும். வீடு வசதி இல்லாதவர்களுக்கு, அந்தந்த மாவட்ட நிர்வாகம், கட்டணம் செலுத்தி அல்லது இலவச தங்குமிடம் ஏற்பாடு செய்யும்.

* விமான நிலையத்தில் இருந்து, தனிமைப்படுத்தும் இடம் அல்லது வீடுகளுக்கு செல்வோர், தங்களுடைய சொந்த வாகனத்திலோ அல்லது வாடகை வாகனத்திலோ செல்லலாம்
* தமிழக அரசு அறிவித்துள்ள விதிகளின்படி, சிறிய காரில், டிரைவர் தவிர ஒருவரும், பெரிய காரில், டிரைவர் தவிர இருவரும் பயணம் செய்யலாம்.

* அதேபோல, தமிழகத்திலிருந்து, வெளி மாநிலம் செல்லும் பயணியர் அனைவரும், விமான நிலையத்தில், முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகே, விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர்
* நோய் அறிகுறிகள் தென்பட்டால், விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும்.

* வெளி மாநிலம் செல்லும் பயணியர், அந்தந்த மாநிலத்தில் உள்ள, மருத்துவ விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.

* பயணியர் அனைவரும், முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

சுகாதாரத் துறை அறிவித்துள்ள விதிமுறைகள் அனைத்தையும், முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு அறிவித்தபடி, நாடு முழுதும், இன்று உள்நாட்டு விமான சேவை துவக்கப்படுகிறது. இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில், வெளிப்படையாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது, பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE