https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/train.jpg

உத்தரப் பிரதேசத்துக்கு பதில் ஒடிசா சென்றடைந்த சிறப்பு ரயில்

by

மகாராஷ்டிரத்தில் இருந்து உத்தரப்ப் பிரதேசம் புறப்பட்ட சிறப்பு ரயில் ஒடிசா சென்றடைந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், புலம் பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்வதற்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

அது தவிர 15 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயணிகள் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் வசாய் ரயில் நிலையத்தில் இருந்து  கடந்த 21ஆம் தேதி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் சிறப்பு ரயில் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு புறப்பட்டது. ஆனால் அந்த ரயில் உத்தரப் பிரதேசத்தின் கோராக்பூர் செல்வதற்கு பதிலாக, ஒடிசாவின் ரூர்கேலா மாவட்டத்துக்கு சென்று விட்டது. 

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் இது தொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும், அந்த ரயில் ரூர்கேலா செல்ல வேண்டியதுதான் என்று அதிகாரிகள் குழப்பமான பதிலை அளித்துள்ளனர். ரயில்வே துறையின் குழப்பத்தால் தற்போது உத்தரப் பிரதேசம் செல்ல வேண்டிய தொழிலாளர்கள், ஒடிசாவில் பரிதவித்து நிற்கின்றனர்.