https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/WhatsApp_Image_2020-05-25_at_10.jpeg

ரம்ஜான் பண்டிகை: வீட்டிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் 

by

தஞ்சாவூரில் பொது முடக்கம் காரணமாக இஸ்லாமியர்கள் வீட்டிலேயே ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகையை திங்கள்கிழமை மேற்கொண்டனர். 

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று சிறப்புத் தொழுகை மேற்கொள்வது வழக்கம். தற்போது கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால், கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. 

எனவே நிகழாண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரமலான் மாத நோன்பைக் கடைப்பிடித்து, தங்களது வீட்டிலேயே தொழுகையை மேற்கொள்ளுமாறு மத குருமார்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதன்படி இஸ்லாமியர்களும் தங்களது வீட்டிலேயே ரமலான் மாத நோன்பை ஏப். 24-ம் தேதி தொடங்கி மேற்கொண்டு வந்தனர். 

இந்த நோன்பு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் இஸ்லாமியர்கள் தங்களது வீட்டிலேயே குடும்பத்தோடும், உறவினர்களுடன் இணைந்தும் சிறப்புத் தொழுகையை மேற்கொண்டனர். தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.